TRINCO NEWS
Search

திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை

Law school

ஆக்கம் :- திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

எமது நாட்டில் உள்ள கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக அன்று அரசினால் கிராம சேவகர் உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டிருந்தது பின்னர் மக்கள் தொகை அதிகரிப்பு, சேவைகளின் அதிகரிப்பு காரணமாக முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களினால் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தற்போது வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூர்த்தி அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்டு கிராமங்களின் அபிவிருத்தி வேலைகள் இரு உத்தியோகத்தருக்கும் வெவ்வேறாக வெவ்வேறு அமைச்சின் அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறே கிராமங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலையில் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் மகிந்த சிந்தனை அடிப்படையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் நாடு பூராகவும் 52000 பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டு பட்டதாரி பயிலுனர் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டு இதிலும் குறிப்பாக 14000 பட்டதாரிகள் அன்றைய அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (EDO) என்ற அடிப்படையில் வேறாக அமைச்சு, நிர்வாகம் மற்றும் வேலைத்திட்டம் வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகஙகளில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒவ்வொரு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இங்கு ஒரு கசப்பான உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும்
முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு சாதாரணமாக உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு பொது உளச்சார்பு மற்றும் பொது அறிவு பரீட்சைகளின் மூலம் அவர்களுக்கிடையே சிறந்த பெறுபேறுகளைப் பெறுபவர்களுக்கு இரண்டு அல்லது நான்கு வாரம் வரையான பயிற்சியுடன் பூரண சம்பளத்துடன் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகி நான்கைந்து வருடங்கள் படித்து பட்டம் பெற்று பதவிக்காக பல வருடங்கள் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு வருட காலத்துக்கு பத்தாயிரம் ரூபாவுடனான பயிற்சிக்கான நியமனங்களே வழங்கப்படுகின்றது அவ்வாறாயின் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுப் பரீட்சைக்கும் ஈடில்லாத ஒரு வருடகால பயிலுனர் பயிற்சியின்றி சாதாரணமாக ஒரு அரச அலுவலகத்தில் வேலை செய்வதற்கும் பிரயோசனமற்றதொரு உயர்கல்வியே அரசினால் பல்கலைக் கழகங்களில் போதிக்கப்படுகின்றது என்றே என்னத் தோன்றுகிறது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் (கல்விக் கல்லூரிகளில்) இருந்து வெளியேறுகின்றவர்களுக்கு துரிதமாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது பல்கலைக் கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறுபவர்களை பட்டதாரி பயிலுனர் சேவையில்தான் இணைத்துக் கொள்ள முடியுமெனில் பல்கலைக் கழகங்கள் எதற்கு? பல்கலைக் கழகங்களையும் “ பட்டதாரி பயிலுனர் கல்லூரி ” என பெயர்மாற்றம் செய்வது பொருந்துமென தோன்றுகின்றது.
மேற்படி நடவடிக்கை காரணமாகவே இங்கு திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகங்களில் மாத்திரம் நியமிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (EDO) ஏற்கனவே கடமையில் இருந்த இரு உத்தியோகத்தரான கிராம சேவகர் (GS) சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (SDO) ஆகியோரின் வேலைகளை செய்கின்ற சிற்றூழியராக நடாத்தப்பட்டனர், இன்றும் நடத்தப்படுகின்றார்கள்.
உதாரணமாக கிராம உத்தியோகத்தரின் கடமை என எடுத்துக் கொண்டால்.
கிராம சேவகர் நற்சான்றிதழ் எழுதுதல். இதனையும் தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே எழுதி கொடுக்கின்றனர்.
வாக்காளர் இடாப்பு விண்ணப்பம் வீடு வீடாக வழங்குதலும் மீண்டும் அதனை பெற்றுக் கொள்ளலும். இதனையும் தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே மேற்கொண்டு வருகின்றனர்.
கொடுப்பனவுக்கு கூடிய கணக்கெடுப்பு விண்ணப்பமாக இருந்தால் அதனை கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் தாம் மேற்கொள்வார்கள் கொடுப்பனவு அற்ற கணக்கெடுப்பு விண்ணப்பமாக இருந்தால் அதனை தமக்கு வேலைகள் இருப்பதாக காட்டி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேல் பொறுப்பு சாட்டுவார்கள்
E-Citizens விண்ணப்பபடிவங்களை Online இல் பதிவு ஏற்றுவதாக இருந்தாலும் அதற்கான விண்ணப்படிவங்களை வழங்கி மீண்டும் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் அதுவும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதே சாட்டப்படுகின்றது.
அடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவங்கள் நிரப்புவதற்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டுக்குரிய புள்ளிவிபரங்கள் தயார்படுத்துதல் செய்தல். தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இன்னும் பல, பொது மக்கள் மத்தியில் கிராம உத்தியோகத்தர்கள் எம்மை அவர்களுக்கு உதவியாளர்களாக வந்துள்ளதாக எம்மை அறிமுகப்படுத்தி மக்களிடத்தில் எமது கௌரவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தகின்றனர்.
இத்தகைய வேலைகளை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களே செய்வார்கள் எனின் கிராம சேவகர் ஏன்? எதற்கு? இதற்காகவா 3, 4 வருடங்கள் கற்று பட்டம் பெற்றார்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் இத்தகைய வேலைகளை கிராம உத்தியோகத்தர்களே செய்தார்கள் ஏன் தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் இந்த வேலைகளை தினிக்கபடுகின்றது.
இத்தனைக்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் க.பொ.த சாதாரண தரத்துடனோ அல்லது க.பொ.த உயர்தரம் படித்தவர் அல்லர். அனைவரும் HNDA, B.A, B.Com, B.B.A, M.B.A, M.A, M.SC பட்டம் முடித்த பட்டதாரிகளாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான இன்னல்களும் மன உளைச்சல்களும் நிரந்தர நியமனம் பெற்ற வருடங்கள் பல கடந்த பின்னரும் தொடர்கதையாக உள்ளது. இத்தனைக்கும் கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் க.பொ.த சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர்தரம் கல்வி தகமை மாத்திரம் கொண்டவர்கள்.
அடுத்ததாக சமூர்த்தி உத்தியோகத்தர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் க.பொ.த சாதாரண தரம் மாத்திரமே தற்போது வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது கல்வி தகைமையாக க.பொ.த சாதாரண தரத்தில் ஆறு பாடங்களும் அல்லது க.பொ.த உயர்தரத்தில் ஒரு பாடம் மாத்திரமே சித்தி கல்வி தகமையாக கோரப்பட்டுள்ளது.
தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அதிகாரம் செலுத்துவதற்கு கிராம சேவகர் உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முற்படுகின்றனர் கிராம சேவகர் நிர்வாகம் கிராம சேவகர் உத்தியோகத்தர்களை நிர்வகிப்பதற்கு மாத்திரமே, சமூர்த்தி உத்தியோகத்தர் நிர்வாகம் சமூர்த்தி உத்தியோகத்தர்களை நிர்வகிப்பதற்கு மாத்திரமே ஆனால் இவர்கள் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக விடயங்களிலும் அதிகாரத்திலும் தலையிடுகின்றனர்.
இந்நிலை தொடருமாக இருந்தால் கைகலப்புகள் கூட ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படலாம். அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்நிலை மாறி அதிகாரம் துஷ்பிரயோகத்திற்கு உற்பட்டு வேறு நபர்களால் கையாளப்படுகிறது.
ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மாவட்ட பிரதேச செயலகங்களில் பணியாற்று கின்றனர் அவர்கள் தங்களுக்குறிய அமைச்சுக்குறிய வேலையினை மட்டுமே மேற் கொள்ளுகின்றனர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாத்திரமே, கிராம சேவகருக்கு வருகின்ற மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தருக்கு வருகின்ற, புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு வருகின்ற அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் எழுத்து மூலமான ஆவணங்கள் இல்லாத சந்தர்பத்திலும் இத்தகைய செயல் வாய்மூலம் சொல்லி வேலையை திணிக்கின்றனர் இத்தகைய செயல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மாத்திரமே இடம் பெறுகிறது.
இந்த நிலைமையினை பல முறை அந்தந்த பிரதேச செயலாளர்;, உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு நிலையினை எடுத்துக் கூறியும் இதுவரை அதற்காண தீர்வும் பெற்று கெடுக்கப்படவில்லை.
தற்போது நிரந்தர நியமனம் கிடைத்த நிலையிலும் தமக்கான பிரத்தியேக அமைச்சின் வேலைத்திட்டம் இருந்த போதிலும் ஏனைய அமைச்சுகளின் உள்ள உத்தியோகத்தர்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தலைமையிலே பொறுப்புச் சாட்டப்பட்டு விசாரணைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தவிர ஏனைய அமைச்சுக்களில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்பட்டு கௌரவமாகவும் அதிகாரத்தடனும் பணியாற்றுகின்றனர்.
ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்கப்பட்ட காலத்திலிருந்து சரியான இருக்கை வசதி செய்யப்படாததால் பட்டதாரிகள் பலர் மர நிழல்களில் காலம் கழித்த வரலாறுகள் நிறையவே உண்டு. அலுவலகங்களில் பட்டதாரிகள் வேண்டாதவர்களாக பார்க்கப்பட்டதால் அலுவலகப் பணியாளர்கள் கூட மதிக்காத அசௌகரியங்களை அனுபவித்த சம்பவங்களும் பலருக்கு உண்டு. ஆளணிப் பட்டியல் உருவாக்கப்பட்டு அதற்கேற்ப நியமனம் வழங்குவதுதான் இந்த நாட்டில் பின்பற்று வந்த மரபு முறையாகும்.
பிரதேச செயலகங்களில் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்படாமல் சாதாரண சிற்றூழியராலும் மதிக்கப்படாமல் அகௌரவமாகவும் அதிகாரம் இன்றியும் கிராம சேவை உத்தியோகத்தரின், சமுர்த்தி உத்தியோகத்தரின் வேலைகளை செய்ய பணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் GS , SDO மூலம் பல முரன்பாடுகள் ஏற்படுகிறது ஆனால் வேறு அமைச்சின் வேலைகளுக்கும் எமக்கும் தொடர்புகள் இல்லை அதுமாத்திரமன்றி அதற்கான எந்தவித கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை. எமக்கான போக்குவரத்து கொடுப்பனவு சுற்று நிருபம் வெளியிடப்பட்டும் அன்றிலிருந்து இன்று வரைக்கும் போக்குவரத்து கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதும் இல்லை.
இவ்வாறான நிலைப்பாடுகளும் நடைமுறையும் வேறு எந்த பிரதேச செயலகங்களிலும் இல்லாத நடைமுறைகளும் விதிகளும் எம்மீது இங்கு பின்பற்றப்படுவதோடு எமக்கு அமர்ந்து இருப்பதற்கு தனியான இடங்களோ இன்றி கிணற்றடி கட்டுகளிலும், கூடாரங்களிலும், ஏனைய பிரிவு காரியாலங்களிலும் அலுவலக நேரங்களில் குறிப்பாக புதன் கிழமைகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே மூன்று வருட காலம் முடிந்து எமது சேவை காலத்தில் பட்டதாரிகள் என்ற எவ்வித கண்ணியமோ, மதிப்போ எமக்கு வழங்கப்படாமல் சாதாரண சிற்றூழியர்கள் போல நடாத்தப்படுவது நாம் இதுவரை கற்ற பட்டப்படிப்பிற்கு மதிப்பின்றியே காணப்படுவதோடு இந்நிலை தொடருமாக இருந்தால் உளரீதியான பாதிப்புக்கு பல பட்டதாரிகள் தள்ளப்படுவார்கள்.
மேற்படி நிலைமைகள் தொடர்பாக அண்மையில் இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட திருகோணமலை மாவட்ட அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது, நாட்டில் உள்ள 14000 பட்டதாரிகளின் நிலையும் இதுவே.ஏனைய அமைச்சுக்களில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்பட்டு கௌரவமாகவும் அதிகாரத்தடனும் பணியாற்றுகின்றனர். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்படாமல் சாதாரன சிற்றூழியராலும் மதிக்கப்படாமல் அகௌரவமாகவும் அதிகாரம் இன்றியும் கிராம சேவை உத்தியோகத்தரின (G.S) சமுர்த்தி உத்தியோகத்தரின் (SDO) வேலைகளை செய்யவும், பணியாற்றவும் பணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக (DO)பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் GS, SDO மூலம் பலமுரண்பாடுகள் ஏற்பட்டு வாய்தர்க்கங்களும், பிரச்சினைகளும் எற்பட்டு விடுகின்றது.
எனவே தமக்குரிய கௌரவத்தையும் மரியாதையும் மற்றும் தனியான வேலைப்பட்டியலையும் பெற்றுத் தந்து சுதந்திரமாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்கின்ற உத்தியோகத்தர்களாக செயற்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, கௌரவ பிரதமர், பிரதம செயலகம், கௌரவ ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவவேண்டும் என பாதிக்;கப்பட்ட பட்டதாரிகள் சார்பில் வினயமாக வேண்டிக் கொள்பவர்களாகவும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எப்போதும் விசுவாசமாகவும் உறுதியுடனும் ஒத்தழைப்பவர்களாக இருப்பார்கள்




3 thoughts on “திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை

  1. M.Thayaparan

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் திருமலை மாவட்ட சகல பி.செயலாளர்களையும் குறிப்பிட்டது தவறு. வெருகல் பிரதேச பிரிவில் இவ்வாறான செயற்பாடுகள் கிடையாது. கி.சேவையாளர்களோ, சமூர்த்தி அபி.உத்.தர்களோ EDO’s கடமைகளில் தலையிடுவதில்லை. ADP or என்னால் மட்டுமே வழி நடத்தப் படுகின்றனர். பட்டதாரிகளாயுள்ள நீங்கள் உங்கள் கடமைப்பட்டியலுக்கு அப்பால் செயற்பட வேண்டியதில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.அல்லது GA ற்கு முறையிடலாம். இவ்வாறு ஒட்டுமொத்தமாக சகல பி.செயலாளர்களையும் குறை சொல்வது தவறு.

    Reply
  2. T.Rajasingam

    பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள் சம்மந்தமாக TRINCO NEWS இணையதளத்தில்,முகப்புத்தகத்தில் வெளியிட்ட அறிக்கைதொடர்பாக

    அவர்கள் குறிப்பிட்டுது போன்று அவர்களுக்கு அவலங்கள் ஏற்பட்டிருப்பின் அவை நிவர்த்தி செய்யப்படவேண்டியவை அந்த அறிக்கையில் பலவிடயங்கள் சரியானவையானதும், ஏற்றுக் கொள்ளககூடியதுமாகும்.
    தம்பலகாமம் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார உத்தியோகத்தர்கள் அந்தந்தபிரிவிற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருடன் மிகவும் சிநேகபூர்வமாகவும் ஒற்றுமையுடனும் கடமையாற்றுகின்றனர். கிராமஉத்தியோகத்தர் பிரிவில் இவர்களுக்கும் தனியான அலுவலகம் இருப்பதுடன் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் போது இருக்கைவசதிகளுடன் கூடிய பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
    எனினும் இந்த அறிக்கையில் கிராம உத்தியோகத்தர்களின் தகைமைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தவை அவசியமற்றதொன்றாகும். இருப்பினும் அதற்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.
    எமது இக்கிராம உத்தியோகத்தர் சேவையானது மன்னராட்சி காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு பதவிப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது கிராம உத்தியோகத்தர் எனும் பெயரில் அரசின் கிராமிய மட்ட நேரடிப் பிரதிநிதிகளாக செயற்பட்டுவருகிறோம். எமக்கு பலவித சட்டமூலங்களாலும், சுற்றுநிருபங்களாலும் கீழ் வரும் கடமைப் பகிர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எமது அதிகாரப் (பிரதேசத்தில்) எல்லைக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், தண்டனைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் எமக்கு அதிகாரமளிக்கப்பட்டவைகள் தொடர்பாக சமாதான உத்தியோகத்தராக செயற்படுதல், பலவித சட்டமூலங்கள் சுற்றுநிருபங்களுக்கமைய பொறுப்புக்களை நிறைவேற்றுதல், பிரிவைச் சேர்ந்த மக்களது பொருளாதார, சமூக, கலாச்சார, அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக இனங்காணப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு பிரதேசசெயலாளரின் மேற்பார்வையிலும், அனுமதியுடனும் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன் அதிகார எல்லைக்குள் அபிவிருத்தி வேலைகளை செயற்படுத்தி மக்களின் சமூக நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தராகச் செயற்படுதல். சஅத்துடன் நாம் பொறுப்புக் கூறலுடன் சுதந்திரமாகச் செயற்பட்டு தற்றுணிபுடன் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள உத்தியோகத்தர்களாவர்.
    இப்படிப் பலவித கடமைகளுக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உரிய நாம் பிரிவில் உள்ள ஒருவரின் பிறப்பு தொடக்கம் இறப்பு வரை பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் எமது சேவையின் மூலம் அத்தியாவசியமாகக் கடமையாற்ற வேண்டியுள்ளது.
    இவ்வுன்னத சேவைக்குள் இணைபவர்கள் அடிப்படை தகைமையாக க.பொ.த.சாதாரனதர பரீட்சையில் தாய் மொழி மற்றும் கணிதபாடங்களில் திறமைச்சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அத்துடன் (தற்போது) க.பொ.த.உயர்தரத்திலும் சித்தியடைந்திருக்க வேண்டும். வர்த்தமானிப் பத்திரிகையில் ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பங்கள் கோரப்படும் போது விண்ணப்பித்து தொடர்ந்து வரும் போட்டிப் பரீட்சையிலும் சித்திபெற்று, உயரதிகாரிகளால் நடாத்தப்படும் நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றி தெரிவு செய்யப்படுவர்.
    இவற்றைக் குறிப்பிடுவதற்கான காரணம், உங்களது அறிக்கையில் எமது சேவையின் தகைமை பற்றி கேள்விக்குட்படுத்தியதற்காகவேயாகும். அத்;துடன் னுளு-04 எனப்படும் வதிவிடமற்றும் குணநலச் சான்றிதழ் (நற்சான்றிதழ்) தொடர்பாக, இச்சான்றிதழில் கையொப்பமிடும் அதிகாரம் கிராம உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமே உரியது என்பதுடன் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களும் நாமே தவிர வேறு யாருமல்ல.
    பட்டதாரிகளில் குறிப்பிடத்தக்க அளவினர் க.பொ.த.சாதாரனதரப் பரீட்சையில் கணிதபாடத்தில் அல்லது தாய் மொழியில் அல்லது இவ்விரு பாடங்களிலும் திறமைச் சித்தி (ஊ) இல்லாமல் பட்டதாரியாக முடியும் என்பதும் வெளிப்படையானது. அத்துடன் நாம் இச் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது போன்று போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகம் கொடுத்திருப்பார்களாயின் எத்தனை பேர் சேவையில் உள்வாங்கப்பட்டிருப்பர் என்பது பற்றி அவர்களது மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.
    எது எப்படியிருப்பினும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச அலுவலர் எனும் வகையில் கடமைபகிர்வு மற்றும் பொறுப்புக் கூறல் எதுவுமின்றி பொதுமக்களின் வரிப்பணத்தில் வருடக்கணக்கில் சம்பளத்தினைப் பெற்றுவருவது மனசாட்சிக்கு விரோதமானது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, தங்களுக்கு கடமைப்பகிர்வும் பொறுப்புக் கூறலும் கொண்ட அரச அலுவலராக நியமிக்கக் கோரும் இவ்வறிக்கை வரவேற்கத்தக்கது.
    இவ்வறிக்கை தொடர்பாக, நாடும் மக்களும் பயன் பெறும் வகையில் இப் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய (பட்டதாரிகள்) நீங்கள் செயற்றிறன் மிக்க கடமைப்பகிர்வுடன் பொறுப்புக் கூறக்கூடிய அரச உத்தியோகத்தர்களாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களதும் அவாவாகும்.

    நன்றி!

    த. இராஜசிங்கம்
    தலைவர்,
    இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க
    தம்பலகாமம் பிரதேசக் கிளை.

    Reply
    1. vmwebs Ent

      ஐயா,
      உங்கள் கருத்துக்களை வரவேற்பதோடு இனி வரும் காலங்களில் அனைத்து ஊழியர்களையும் (சிற்றூழியர்களாக இருக்கட்டும்) சுய கௌரவத்துடன் நடாத்த வேண்டியது எமது தலயாய கடமையே!

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *