TRINCO NEWS
Search

வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே..!!

வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே – உந்தன்

வரவைக் காணவில்லை வெண்புறாவே

நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே – இன்னும்

நேரம் வரவில்லையோ வெண்புறாவே


1994 ம் ஆண்டு இலங்கை அரசியலில் ஒரு பெரிய மாற்றம் அதாவது ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட கால நீண்ட ஆட்சி முடிவடைந்து, கதிரை சின்னத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றமைதான் அந்த மாற்றம். அதில் இன்னொரு விஷேட அம்சமும் இருக்கிறது. மேல் மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறினார்.. அப்போது அரசாங்க படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் கடும் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியாகும்.. இவர் ஆட்சிக்கு வந்ததும் யுத்தநிறுத்தத்தை அறிவித்து சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்..பின் அது ஒரு உடன்பாடுக்கு வராமல் போனது பெரிய கதை மற்றும் துரதிஷ்டமும்தான்!!

இக்காலப்பகுதியில் நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்க ஆதரவுடன் ரூபவாஹினி தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட சமாதானப்பாடலே இந்த வெண்புறா பாடல்.. அக்கால கட்டத்தில் ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி (ITN) நிகழ்ச்சிகள் பார்த்தவர்கள் மனதில், பிடித்ததோ..இல்லையோ..பலவந்தமாகவேனும் புகுத்தப்பட்ட பாடல் இது! காரணம் ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவில் ஏற்படும் சில நிமிட இடைவெளியில் இந்தப்பாடலை ஒளிபரப்புவார்கள்.. இப்போது போல் அப்போது பல அலைவரிசைகள் இல்லை மாற்றி மாற்றி பார்ப்பதற்கு.. அதனால் ஒரு நாளிலேயே பல தடவை பார்த்தும் கேட்டும் மனதில் பதிந்துபோன பாடல்.. மாலை செய்தியறிக்கையின் முன்னும் பின்னும் தவறாமல் ஒளிபரப்புவார்கள் அந்தக்கால சிறுசுகளின் முனுமுனுக்கும் பாடலாகவும் இது இருந்தது.

சமாதான பாடல் என சொல்லிக்கொண்டாலும் இந்தப்பாடலின் காட்சியமைப்புகள் ஒருபக்கம் சார்ந்ததாகவே இருக்கும். அதாவது இலங்கை ராணுவம் பொது மக்களுக்கு உதவுவது போல் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.!! இவற்றை இப்போது பார்க்கும்போது சிலருக்கு கோபம் வரவும் கூடும்!

அப்போது இளம்பாடகியாக இருந்த பிரபல சகோதர மொழி பாடகி நிரோஷா விராஜினி அவரது கொஞ்சும் தமிழால் பாடியிருப்பார். அதனால் இதன் அநேக பாடல் வரிகள் சரியாக புரியாது.. ஆனாலும் சிறந்த குரல்வளம் கொண்ட பாடகி அவர். குத்துமதிப்பாத்தான் வரிகளை புரிஞ்சக்கனும்! அழகான கவிதையாக பாடலை எழுதியவர் எம். எச். எம் ஷம்ஸ்.. இசையமைத்தவர் பிரபல இலங்கை இசையமைப்பாளர் பிரேமசிறி ஹேமதாஸ!

அதன் முழு பாடல் வரிகள் இதோ..


வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே – உந்தன்

வரவைக் காணவில்லை வெண்புறாவே

நெல்லில் மணி பொருக்கும் வெண்புறாவே – இன்னும்

நேரம் வரவில்லையோ வெண்புறாவே


ஓடையில் இப்போ நீர் வழிகின்ற

ஓசைகள் கேட்பதில்லை

வாடையில் பூக்கும் பூக்களின் வாசம்

பாதையில் வீசவில்லை


கோடைக் காட்சிகளால்

கொதிக்கும் உள்ளமெலாம்

கோரம் மாறவில்லை

கொடுமை தீரவில்லை.


மாலையில் தேனாய் காதினில் விழும்

பாடல்கள் கேட்பதில்லை

ஓலையில் பேசும் கிள்ளைகள் இன்று

ஒன்றையும் காணவில்லை.

மேகம் இயந்திரமாய்

மிதக்கும் காரணத்தால்

தாகம் தீரவில்லை

தனிமை தீரவில்லை

https://youtu.be/XVq11j_pkYI
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *